Monday, March 10, 2014

அதாஉல்லாவும், றிசாத் பதியுத்தீனும் தமது பதவிக்காக முஸ்லிம் காங்கிரஸினை விமர்சிக்கிறார்கள் - தவம்

(எஸ். அன்சப் இலாஹி)

அமைச்சர் பதவியை மட்டும் தக்கவைத்துக்கொள்வதற்காக அமைச்சர்களான அதாஉல்லாவும், றிசாத் பதியுத்தீனும், முஸ்லிம் சமூகத்தின் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற நடவடிக்கைகளை விமர்சித்துவருகிறார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ. எல். தவம் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாதம்பிட்டியில் இடம் பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் -

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காத அமைச்சர் அதாஉல்லாவும், அமைச்சர் றிசாத் பதியுதீனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக எடுக்கின்ற நடவடிக்கைகளை விமர்சிக்கின்றமை வேடிக்கையான ஒரு விடயமாகும். முஸ்லிம் சமூகம் அழிந்தாலும் பரவாயில்லை, அவர்களுடைய பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும் பரவாயில்லை தங்களுக்கு அமைச்சர் பதவி மட்டும் போதுமானது, அதனை தக்கவைத்துக்கொள்ள என்ன வழி முறைகளை பின்பற்றலாமோ அதனையே செய்து வருகிறார்கள். இதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாய் துறக்கக் கூடாது என்கின்ற காரணத்தினால்தான் முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில் இடம் பெற்ற பௌத்த கடும் போக்குவாதிகளுடைய வன் முறைகளையும், எல்லா விடயங்களையும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவைக் கொண்டும், அதே போன்று ஏனைய வன் முறையாளர்களைக் கொண்டும் கடும் போக்கு வாதிகளை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனை முஸ்லிம் சமூகம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களுக்கான ஒரு தேசிய இயக்கம், இந்த இயக்கம் அரசாங்கத்துடன் இருந்தாலும் அல்லது வெளியில் இருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போதும் அதே போன்று முஸ்லிம்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்ற போதும் அதற்கு எதிராக நிச்சயமாக போராடுவதே இந்தக் கட்சியின் இலட்சியமாகும் என மேலும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment