Thursday, November 21, 2013

15 அப்பாவிகளையும் விடுதலை செய்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் ஏ.எம்.ஜெமீல்

அஸ்லம் எஸ்.மௌலானா: 
நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 15 பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஹர்த்தாலின் போது கைது செய்யப்பட்டு- நேற்று புதன்கிழமை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 21 பேரில் 6 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை 15 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உண்மையில் இந்த 15 பேரும் அப்பாவிகள் எனவும் ஹர்த்தாலின் போது இவர்கள் திட்டமிட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், குறித்த இந்த பொதுமக்கள் 15 பேரையும் விடுவிப்பதற்கு அவசர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
இதற்காக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஜெமீல் தெரிவித்தார்.
அத்துடன் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் சட்ட ரீதியாக அணுகுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள அசாதாராண சூழ்நிலை தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபையில் அவர் அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment