Wednesday, October 2, 2013

ஆடுகிறது அமெரிக்கா - 8 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பு

அமெரிக்காவில், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, அதிபர் பதவி ஏற்று ஆட்சி செய்து வரும் ஒபாமா அரசுக்கு, புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பார்லிமென்டில் போதுமான ஆதரவு கிடைக்காததால், 17 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபராக, பாரக் ஒபாமா தேர்தெடுக்கப்பட்ட பின், அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெருமளவு மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரின் புதிய சிந்தனைகள் மக்களின் எதிர்பார்பிற்கு ஏற்ப, பல மாற்றங்களை நிகழ்த்தினாலும், உலக சந்தைகளில் ஏற்பட்ட மந்தப் போக்கால், அமெரிக்க பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. எனினும், மற்ற அதிபர்களை விட, ஒபாமாவின் அணுகுமுறையும், சிந்தனையும் மக்கள் மத்தியில் அவரை வேறுபடுத்திக் காட்டியது. இதனால், இரண்டாவது முறையாக ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், ஒபாமா, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடுமையாக பாடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக ஒபாமா கூறியிருந்தார். அவற்றை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில், ஒபாமா ஆர்வம் காட்டி வருகிறார். நாட்டு மக்களின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், இதற்காக ஏராளமான நிதியை ஒதிக்கியுள்ளார். 

ஒபாமாவின் இந்த நடவடிக்கைகள், எதிர்க் கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, சுகாதாரத் துறையில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது தவறு என சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்க பார்லிமென்டில், ஒபாமா, பட்ஜெட் தாக்கல் செய்த போது, எதிர்க் கட்சியினரின் ஆதரவு இல்லாததால், அந்த பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை. ""இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும்,'' என, அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். 

இது குறித்து ஒபாமா பேசியதாவது: காங்கிரஸ், அதன் கடமையை செய்ய தவறிவிட்டது. இதனால், பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை. எதிர்க் கட்சிகளின் இச்செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். பட்ஜெட்டுக்கு தேவையான நிதி கிடைக்கும் வரை, நாட்டின் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் இதற்கு முன், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் இதே முறை பின்பற்றப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகள் நல்ல பலன் கொடுத்துள்ளன. தற்போதைய மூடலும் பலனைக் கொடுக்கும் என நம்புகிறேன். அரசு ஊழியர்களும், நாட்டு மக்களும், அரசின் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். 

ஒபாமாவின் இந்த முடிவால், அமெரிக்காவில், 8 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சில தரப்பு ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் செல்லவும், சிலருக்கு, சம்பளம் இல்லாமல் தொடர்ந்து பணிபுரியுமாறும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மூடலால், தேசிய பூங்கா, தேசிய வனவிலங்கு சரணாலயங்கள், இலவச மியூசியம், போன்ற பல இடங்கள் மூடப்பட்டிருக்கும். ராணுவம், பாதுகாப்பு துறை, பாஸ்போர்ட் அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்கள் மட்டும் செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த, 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்க பொருளாதாரத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உலக பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment