Friday, January 10, 2014

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைவு


கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையிலான ஜனநாயக ஐக்கிய முன்னணி மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மத் பாயிஸ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் நேற்றிரவு இணைந்துகொண்டுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் உயர் பீட கூட்டத்திலேயே இவர் இணைந்துகொண்டுள்ளார். இதன்போது கடந்த மேல் மாகாண சபை தேர்தலில் ஜனநாயக ஜக்கிய முன்னணி சார்பாக போட்டியிட்ட அஜித்  பெரேராவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல.எஸ்.ஹமீட் தெரிவித்தார். இந்த தேர்தலில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இந்த தீர்மானம் நேற்று இரவு இடம்பெற்ற கட்சி அதியுயர்பீட கூட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த போதும், மேல் மாகாணத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அதியுயர்பீட கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தினோம்.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கடந்த கிழக்கு மற்றும் வட மாகாண சபை தேர்தல்களில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டது.

இந்த மாகாண சபைகளில் தலா மூன்று ஆசனங்கள் வீதம் பெற்றுள்ளதுடன் வடக்கிலும் கிழக்கிலும் பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை தமதாக்கியுள்ளது. இந்த முறை தமது தனிச் சின்னத்தில் மேல் மாகாண சபையில் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. இன்றைய அதியுயர் பீட கூட்டத்தில் இந்த தேர்தல் பணிகளை கவனிக்கும் வகையில் குழுக்களும் நியமிக்கப்பட்டன.

கொழும்பு மாவட்ட பணிகளின்  பொறுப்பாளராக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும், கம்பஹா மாவட்ட பொறுப்பாளராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின்  தேசிய இணைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், களுத்துறை மாவட்ட பொறுப்பாளர்களாக கட்சியின் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கட்சியின் பிரதி தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment