Thursday, December 12, 2013

தமிழீழம் - சிறிலங்கா - இந்தியா - உலகம் : ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னகர்வு என்ன ? பிரதமர்

எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் முக்கியமானதொரு காலகட்டமாக அமைகிறதெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழம் - சிறிலங்கா - இந்தியா - உலகம் ஆகிய மையப்புள்ளியில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னகர்வு குறித்து தெளிவான வழிகாட்டலை முன்வைத்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருந்த விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்களது அரசவை அமர்வின் நிறைவுநாள் உரையிலேயே இதனை முன்வைத்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் கூடி வடம்பிடித்து தமிழீழம் என்ற தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வோம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள அவரது உரையின் முழுமையான விபரம் :

கௌரவ சபாநாயகர் அவர்களே! கௌரவ அரசவை உறுப்பினர்களே! தமிழகத்தில் இருந்து அரசவை நிகழ்வில் பங்குபெற வருகை தந்திருக்கும் தோழர் தியாகு அவர்களே! பேராசிரியர் மணிவண்ணன் அவர்களே! செனட்சபை உறுப்பினர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சிறப்பு அதிதிகளே! விருந்தினர்களே! 

விடுதலைக்காய் தம்முயிர் ஈந்த மாவீரர்களை மனதில் இருத்தி எனது வணக்கத்தினை முதற்கண் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் முதலாவது அமர்வில் கடந்த மூன்று நாட்களாக நாம் கூடியிருக்கிறோம்.

இந்த அமர்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக இருந்து அரசாங்கத்தை வழிநடாத்திச் செல்லும் தலைமைப் பொறுப்பை என்னிடம் ஏகமனதாக ஒப்படைத்துள்ளீர்கள். விடுதலைப் போராட்டத்தில் எனக்குள்ள பற்றுறுதியின் மீது இந்த அவை கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு நன்றி கூறுவதுடன் இந் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையில் 60க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். இது நம் அனைவருக்கும் புதிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது. அவர்கள் அனைவரையும் நாம் அன்புடன் வரவேற்றுக் கொள்கிறோம்.

நாம் இரண்டாவது அரசவையின் முதலாவது அமர்வினை கூட்டத் தயாராகியிருந்த வேளை உலகில் விடுதலைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதர்சபுருசராக விளங்கி வந்த பெருமதிப்புக்குரிய பெருந்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் தனது 95வது வயதில் நம்மிடம் இருந்து விடைபெற்றிருக்கிறார்.

அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் உலகசமூகத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொள்கிறது.

பெருந்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வின் குறியீடு. மக்களின்  போராட்டங்கள் வெற்றியடைய முடியும் என்பதற்கான ஒரு சாட்சியம். நிறவெறி, இனவெறி போன்ற மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் மனிதகுல அசிங்கங்களுக்கு எதிரான உறுதியான ஒரு போராளி. 

பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டாலும் நீண்ட நெடுங்காலம் கொடும்சிறைக்குள் வதைக்கப்பட்டாலும் தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் நீதிக்கான போராட்டத்தை உலகமயப்படுத்தி அதனை வென்றெடுப்பதற்கு வழிகாட்டிய உன்னதமான விடுதலை வீரர். விட்டுக் கொடுப்பற்ற போராட்டம் மூலம் மனித சமத்துவத்தின் மகிமையை உலகமனச்சாட்சியைத் தட்டி எழுப்பியவாறு முரசறைந்த ஒரு மகத்தான தலைவர்.

பெருந்தலைவர் நெல்சன் மண்டேலாவுக்குத் தலைவணங்கி வணக்கம் தெரிவிக்கும் அதேவேளை அவரது மாண்பு எமக்குக் காட்டி நிற்கும் அனைத்து அரசியல் நெறிமுறைகளையும் நாம் நமக்குள் உள்வாங்கிக் கொள்வோம் என இத் தருணத்தில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

நெல்சன் மண்டேலா அவர்களின் வரலாறு நமக்கு அனைத்தலக அரசுகளின் இயங்குமுறை தொடர்பான பல்வேறு அறிவுரைகளையும் எமக்குத் தருகிறது. இதில் ஒன்றை இங்கு குறித்துக் கொள்ளல் பொருத்தமாக அமையும். 

நெல்சன் மண்டேலா அவர்கள் 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரச தலைவராக பொறுப்பேற்று, நோபல் சமாதானப்பரிசு பெற்ற உலகத் தலைவராக விளங்கிய போதும் அவரை பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து 2008 ஆண்டேதான் அமெரிக்க அரசு முறைமயாக நீக்கியிருக்கிறது. ஏன் இந்த மிக நீண்ட கால நீட்சி?

இது அரசு என்ற முறைமை (System) இயங்கும் நடைமுறையின் ஒரு பக்கத்தை நமக்குக் சுட்டிக் காட்டி நிற்கிறது. ஒரு தடவை ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அரச இயந்திரம் தயங்கித் தயங்கிச் செய்யும் ஒரு காரியமாக பலவிடயங்களில் இருப்பதனை நாம் காண்கிறோம். கொள்கை சார் விடயங்களில், அதுவும் வெளியுறவுக்கொள்கை சார் விடயங்களில் இத் தயக்கம் கூடுதலாக வெளிப்படும். அரசாங்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசுகளின் கொள்கைகளில் மாற்றங்கள் மிகவும் குறைவாக ஏற்படுவதனையும் நாம் நடைமுறையில் காண்கிறோம்.

இறைமையும் சுதந்திரமும் உடைய ஒரு தமிழீழத் தனியரசு உலக அரசுகளில் ஒன்றாக அமைவது தொடர்பாக அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடும் இத்தகையதொன்றாகவே இருந்து வருகிறது. 

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இரு அரசுகள் தீர்வுமுறையினை தீர்வாக கொண்டு தமிழ் மக்கள் அதற்காக உறுதியாகப் போராடி வந்தாலும் தமிழீழத் தனியரசு அமைவதற்கு உலக அரசுகளின் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. 

தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை பிரகடனம் செய்த காலத்திலோ தேசியத் தலைவர் தலைமையில் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சக்கட்ட உயிர்ப்புடன் இருந்த காலகட்டத்திலேயோ இன்று நாம் அரசியல் இராஜதந்திர வழியில் தமிழீழத் தனியரசுக்காகப் போரடி வரும் காத்திலேயோ உலக அரசுகள் தமிழீழத் தனியரசு அமைவது தொடர்பான ஒரு கொள்கைமாற்றத்தை மேற்கொள்ளவில்லை. 

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு நாடு பிரியாத வகையில் ஒரு தீர்வு காண்பது தொடர்பான ஒரு நிலைப்பாடே இவ் அரசுகளிடம் இருந்து வருகிறது.

இலங்கைத்தீவில் இறுகி நிறுவனமயப்பட்டுள்ள சிங்கள பௌத்த அரச முறைமைக்குள் ஈழத் தமிழர் தேசத்தை சமத்துவமாக மதிக்கும் கௌரவமான அரசியல் தீர்வுக்கு இடமேதும் இல்லை. இதனை வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. 

நாம் வரலாற்றுக் குருடர்களாக இருந்து கொண்டு விடுதலைப்பாதையில் முன்னேற முடியாது. 

நமக்குப் புரியும் இந்த வரலாற்று உண்மையின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்பட்ட தமிழீழழத் தனியரசு என்ற தீர்வுக்கு, நலன்களின் அச்சில் உழலும், மிகவும் தயங்கித் தயங்கியே கொள்கை மாற்றங்கள் செய்யும் அரசுகளால் தீர்மானிக்கப்படும் உலக ஒழுங்கில் எவ்வாறு அங்கீகாரம் பெறப் போகிறோம் என்பதே இன்று நம் முன்னாhல் உள்ள முக்கியமான சவால் ஆகும்.

மதிப்புக்குரியவர்களே!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த சவாலை எதிர்கொண்டு உலகில் தமிழர்களுக்கான முதல் அரசை அமைக்கும் பகீரத முயற்சினை மேற் கொண்டு வருவதனைத் தாங்கள் அறிவீர்கள். 2010 ஆம் ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் முதலாவது ஆண்டு நினைவுகள் சுமந்தவாறு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நாள் முதல் மேற்கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இம் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

முதல் மூன்று ஆண்டுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஓர் நிறுவனமாக நிலைநிறுத்துவதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். இருப்பினும் அனைத்துலக அரசியலில் தமிழீழம் குறித்து சாதகமான கருத்து மாற்றத்தை ஏற்படுத்தவதில் நாம் மிக நீண்ட பயணம் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். எம்மை மிக இயங்குதிறன் கொண்ட அமைப்பாக வளர்த்தெடுப்பதிலும் நாம் பல படிகள் முன்னோக்கி நகர வேண்டியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையினை வாழ்த்தி இலக்கு நோக்கி முன்னேறுவதற்கு ஆசி கூறிய உலகத் தமிழர் பேரவையின் தலைவர், எமது பெருமதிப்புக்கும் வணக்கத்துக்குரிய அருட்தந்தை இம்மானுவல் அடிகளார் எம் அனைவரதும் இலக்கும் ஒன்றேதான் என்று தமிழர்களின் சுதந்திர வேட்கையினை அழகாக வெளிப்படுத்தியிருந்தார். 

ஈழத் தமிழரது மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழர்களது இலக்கு நாம் சுதந்திமும் இறைமையும் கொண்ட மக்களாக வாழ வேண்டும் என்பதுதான். நாம் நம்மை நாமே ஆண்டு எமது பாதுகாப்iபுயும் வாழ்வையும் உறுதிப்படுத்திவாறு வாழவேண்டும் என்பதுதான். 

நாம் கனவு கண்டு நிற்பது எமது வீதிகளில் எம் மக்கள் சுதந்திரமாக உலவிட மலர்ச்செண்டுகள் எந்தியவாறு நமது தமிழ் படை வீரர்களை நமது மக்கள் வரவேற்று வாழ்த்தும் அற்புதமான காட்சியினைத்தான். இவையெல்லாம் சுதந்திரமும் இறைமையும் கொண்ட சுதந்திரத் தமிழீழம் என்று அரசு அமைவது மூலம்தான் சாத்தியப்படக்கூடியது. இதனால்தான் இது எமது மக்களின் அரசியல் பெருவிருப்பாக இருந்து வருகிறது. 

சுதந்திரத் தமிழீழம் என்ற எமது இலக்கை அடைந்து கொள்வதற்கு நாம் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் அரசியல் இராஜதந்திரப்பாதை மிகவும் சகிப்புத்தன்மையுடன் முன்னெடுக்கப்படவேண்டியது. இப் பாதையில் நாம் எடுக்கும் முயற்சிகளின் விளைச்சலை அளவீடு செய்வதும் இலகுவானது அல்ல. 

நாம் தமிழீழம் என்ற இலக்கினை அடைவது தவிர்க்க முடியாததொரு வரலாற்றுத் தேவையாக இருப்பது மட்டுமன்றி ஈழத் தமிழர் தேசத்தின் உயிர்வாழ்வுக்கு அத்தியாவசிமானதாகவும் இருக்கிறது. எமக்கென அரசை நாம் அமைக்கத் தவறுவோமானால் அந்த அரசுக்கு அனைத்துலக அங்கீகாரம் பெறத் தவறுவோமானால் சிங்களத்தின் இன அழிப்புக்குள்ளாகி தேசத் தகமை இழந்து வெறும் உதிரி மனிதர்களாகச் சிதறிப்போய்விடுவோம்.

இதனால் நமது போராட்டம் மனித குலத்தின் ஒரு அடிப்படை உரிமையான உயிர்வாழ்தலுக்கான போராட்டம்.  இதனை நாம் தனிமனிதர்களாகச் சிந்திக்காமல் ஒரு தேசமாக, ஒரு பெருமை மிக்க மக்கள்கூட்டமாக நின்று சிந்திக்கும் போது மிக இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும். 

இப் போராட்டத்தில் சிங்கள தேசம் தமிழர் தேசத்தினை ஆளும் உரிமையற்றது என்பதனை மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்கிறோம் !

தமிழர் தேசத்தின் இறைமை தமிழர்களுக்கேயுரியது என்பதனை முரசறைந்து சொல்கிறோம் ! 

உலகில் எஞ்சியிருக்கும் நாகரீக விழுமியங்களின் பெயரால், அனைத்துலகச் சட்டங்கள் நமது மக்களுக்கு தந்திருக்கும் உரிமைகளின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால், மனித உரிமைகளின் யெரால் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்தின் ஒவ்வொரு சிறு எச்சமும் நமது மண்ணில் இருந்து அகற்றப்படவேண்டும் என நாம் அறைகூவல் செய்கிறோம் !

இவையெல்லாம் அறத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் இலட்சியத்தின் அடிப்படையில் மிக நீதியான நிலைப்பாடுகள். அறத்தை மதிக்காத தர்மத்தை மிதிக்கும் சிங்கள அரசின் பிடியில் இருந்து நமது மக்களை மீட்பது எவ்வாறு ? 

எமது தாயகத்தில் இருந்து சிங்கள அரசைத் தூக்கி எறிவது எவ்வாறு? 

இது ஈழத் தமிழர் தேசம் தனது பலத்தின் அடிப்படையில் மட்டும் அடைந்த விடக்கூடியதொன்றுதானா ?

இவ் வியடத்தில் நாம் தெளிவானதொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். தமிழீழ விடுதலை அனைத்துலக சமூகத்தின் பங்கு பற்றுதலுடன் மட்டும்தான் சாத்தியப்பட முடியும். 

அதற்கமைய நாம் எமது வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனது 2013 ஆம் ஆண்டு மாவீரர் நாள் அறிக்கையில்  நாம் செயற்பட வேண்டிய முப்பரிமாணங்கள் பற்றிக் குறிப்பிடடிருந்தேன். 

தமிழீழ அரசுக்கான அனைத்துலக அங்கீகாரம் பெறு உழைத்தல், 

சிங்களத்தின் இன அழிப்புக்கெதிராக நீதிகோரிப் போராடல்

தாயக மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தல் ஆகியன தமிழீழ அரசினை உருவாக்கும் போராட்டத்தில்  முக்கியமான முப்பரிமானங்கள். இப் பரிமாணங்களை வலுப்படுத்தும் வகையில் புலம் பெயர் தமிழர் சமூகம் ஒரு பலம் மிக்க மக்கள்கூட்டாக வளர்ச்சி அடையும் வகையிலும் நாம் செயற்படவேண்டியர்களாக உள்ளோம்.

இதில் தமிழீழ அரசுக்கான அங்கீகாரத்துக்காக உழைத்தல் என்பது கருத்து நிலை, நடைமுறை நிலை 
என்ற இரண்டு தளங்களில் அமைய வேண்டியது. கருத்து நிலையில்  நாம் அரசமைக்கத் தகைமை உடையவர்கள் என்பதனையும் ஈழத் தமிழர் தேசம் சமத்துவமாகவும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு இது தவிர  வேறு வழியேதும் இல்லை என்ற கருத்துரவாக்கத்தை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்த உழைத்தல். 

இரண்டாவது தளமான நடைமுறை நிலை பலம் மிக்க அரசுகளினதும் தமிழீழ நலன்களையும் எவ்வாறு பொருந்தச் செய்வது தொடர்பான தளம். இந்த இரண்டாவது தளத்தில் செயற்படுவதற்கு நம்மிடம் தெளிவானதொரு வெளியுறவுக் கொள்கை இருத்தல் வேண்டும். 

நாம் விரும்புவதெல்லாம் தேசங்களின் அரசமைக்கும் உரிமையினை அங்கீகரிக்கும் உலக ஒழுங்கு உருவாக்கபடுவதனையே. அத்தகையதொரு மாற்றம் உலக ஒழுங்கில் எற்படும்போது எமது விடுதலைக்கான பயணம் இலகுவானதாக அமையும். ஆனால் ஆடைகள் ஏதும் அணியாத அரசுகள் என்ற முறைமையில் வெட்கம் ஏதும் இன்றி அரசுகள் தமது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி இயங்குகின்றன. இதனால் நாம் நடைமுறைநிலையின் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு இயங்குதல் செயற்பாட்டுத் தளத்தில் அவசியமாககப் படுகிறது.

தமிழீழ அரசுக்கான உலக அங்கீகாரம் இந்தியாவின் அங்கீகாரத்தடன் பெரிதும் தொடர்புபட்டிருக்கும் நடைமுறை யதார்த்தம் இன்றைய உலக ஒழுங்கில் உண்டு. இந்தியாவின் தமிழீழம் சார்ந்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் தமிழகத்துக்கு உண்டு. அதனதல்தான் தமிழீழத்தின் திறவுகோல் தமிழகத்தில் உண்டு உன நாம் கோருகிறோம். தமிழகத்தின் வெற்றிகரமான செயற்பாடு ஈழத் தமிழர் தேசம் தமது விடுதலைக்கான போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதிலும் முன்னெடுப்பதிலும் பெரிதும் தங்கியுள்ளது. 

தமிழீழத்துக்கான அங்கீகாரத்தைக் கோரும் போது சிறிலங்கா அரசைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் நாம் சமாந்திரமாக மேற்கொள்ள வேண்டும். 

சிறிலங்கா மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் கோரிக்கையை வலுமான பேராட்டமாக மாற்ற வேண்டும். தமிழகச் சட்சபையில் சிறிலங்கா மீது பொருளாதாரத்தடை விதிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதால் இப் போராட்டத்தை தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் விரிவுபடுத்தி வலுப்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இரண்டாவது பரிமாணமான சிங்களத்தின் இன அழிப்புக்காக எதிராக நீதிகோருதல் ஒரு பரந்துபட்ட தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியது. ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வு தமிழீழத் தனியரசு என்பதனை ஏற்றக் கொள்ளாதவர்கள் கூட நீதியின் அடிப்படையில் இணைந்து கொள்ளுக்கூடிய தளம் இது. இந்தத் தளத்தை எவ்வளவு விரிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு நாம் இதனை விரிவுபடுத்தியாக வேண்டும். 

அனைத்துலக அரசபொறிமுறைகளுக்கூடாகக் கிடைக்கும் அரங்குகள், குடியியல் சமூகத்தின் முன்னெடுப்புகள் எனக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும். இம் முயற்சியில் எதிர்வரும் மார்ச் 2014 மனித உரிமைகள் சபை அமர்வகள் கூடுதல் கவனத்தைப் பெறும். இது குறித்தம் நாம் இவ் அமர்வில் கவனத்திற் கொண்டுள்ளோம்.

தாயக மக்களது வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளில் தமிழருக்கென்றொரு தேசிய மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். இவ் நிறுவனத்துக்கூடாக வெவ்வேறு மட்டங்களில் நடைபெறும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதுடன் அதனை விரிவுபடுத்தவும் வேண்டும். இந்த தேசிய மேம்பாட்டு நிறுவனம் தாயகத்தில் தனது வேரைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பதால் தாயகத் தலைவர்கள் இது குறித்த நடவடிக்ககையை விரைவுபடுத்தல் அவசியமாக இருக்கிறது.

கடந்த மூன்று நாட்களாக நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் முதலாவது அவர்வில் இம் மூன்று பரிமாணங்களிலும் செயற்படுவதற்கான பல்வேறு செயலமர்வுகளை நடாத்தியுள்ளோம். 

புலம்பெயர் மக்களை ஒரு வலுவுள்ள சமூகமானக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளையும் ஆராய்ந்ததுள்ளோம். தமிழீழத்தை அமைப்பதற்குரிய வெளியுறவுக் கொள்கை குறித்தும்  விவாதித்திருக்கிறோம். முக்கியமான தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம்.

தென்னாபிரிக்காவில்; இடம் பெற்றது போன்ற உண்மைகளையும் இணக்கப்பாட்டையும் கண்டறியும் ஆணையத்தினை அமைத்து இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை குறித்து செயற்படுவது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டள்ள நிலையில், இம் முயற்சி நீதியினையும் உண்மையினையும் குழிதோண்டிப் புதைக்க விரும்பும் சிங்கள அரசுக்கு பொருந்;தாதொன்றல்ல என்பதனையும் அனைத்துலக நீதிவிசாரணை முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியது என்பதனையும் கவனத்திற் கொண்டு இதனை நிராகரிக்கும் தீர்மானம் ஒன்றையும் நாம் நிறைவேற்றியுள்ளோம். 

இத்தகைய முயற்சிகளை தமிழீழம் அமையும் போது நாம் மேற்கொள்வோம் என்பதனையும் தென்னாபிரிக்க அரசுக்கும் மக்களுக்கும் நாம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

மதிப்புக்குரியவர்களே,

கடந்த மூன்று நாட்களாக நாம் கூடியிருந்து மேற்கொண்ட செயற்பாடுகள் செயற்பாட்டுத்திட்டங்களாக வடிவமைக்கபட்டு விரைவில் வெளிவரும் என்பதனைத் தெரிவித்துள் கொள்ள விரும்புகிறேன். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவையினையும் நாம் விரைவில் அறிவிப்போம். 

இந்த இரண்டாவது அரசவைக் காலமான எதிர்வரும் 5 வருடங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போhராட்டத்துக்கும் முக்கியமானதொரு காலகட்டமாக அமைகிறது. 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் கூடி வடம்பிடித்து 
தமிழீழம் என்ற தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தயாகம்.

இவ்வாறு பிரதமர் விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்களது உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

No comments:

Post a Comment