Sunday, December 1, 2013

பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்றமையால் தீவிர முயற்சியில் ஹக்கீம்

(சுஐப்.எம்.காசிம்)
மு.கா.வின் அதிகாரத்திலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பட்டதையடுத்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைக்கு உரிய தீர்வைப் பெறும் வகையில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பிரதேச சபையில் மு.கா.வின் 6 உறுப்பினர்களும், ஐ.ம.சு. முன்னணியின் 2 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 9 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பட்ஜட் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஆளும் கட்சியான மு.கா.வின் 4 உறுப்பினர்களுடன் தமிழ் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரும் இணைந்து எதிராக வாக்களித்ததனால் பட்ஜட் தோல்வியைத் தழுவியது.

இந்தப் பிரதேச சபையில் தவிசாளர் எம்.எஸ்.எம். வாசித்திற்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பிரதேச சபைத் தலைவர் நமது கருத்துக்களை உள்வாங்குவதில்லை எனவும் எழுந்தமானமாக செயற்படுவதாகவும் சபையைத் தவறாக வழிநடத்தி வருவதாகவும் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்வதாகவும் அதிருப்தியாளர் குழுவின் தலைவரான பிரதித் தவிசாளர் ர் ஏ.எம்.எம். தாஜுதீன் தெரிவித்தார்.

பட்ஜட் தோல்வியையடுத்து கட்சிக்குள்ளேயே எதிரெதிராக மோதிக் கொண்டிருக்கும் இரண்டு சாரார்களையும் கொழும்புக்கு அழைத்து பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அவர்களை சந்தித்த மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இரண்டு சாராரின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அதே கட்சியைச் சேர்ந்த பசறிச்சேனை முபாரக் தவிசாளர் வாசித்துக்கு ஆதரவாக உள்ளார். மு.கா.வைச் சேர்ந்த உதவித் தவிசாளர் தாஜுதீன், மர்சூக், ரஹீம், முபாரக் ஆகிய உறுப்பினர்கள் தவிசாளரின் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் தீவிரமாக உள்ளனர்.

இந்த நால்வரும் தவிசாளரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையில் அழுங்குப் பிடியாக உள்ள போதும் தலைமை இந்த விடயத்தில் அவசரத்தைக் காட்டாமல் தீர்க்கதரிசனமான சில முடிவுகளை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தவிசாளர் வாசித்தின் நடவடிக்கைகளை எதிர்க்கும் உறுப்பினர்களில் ஒருவரான எம்.எஸ்.எம்.மர்சூக் மு.காவில் சிரேஷ்டமானவராகவும் 3 தடவைகள் பிரதேச சபைத் தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இவர் முன்னாள் தவிசாளரும் கூட. தவிர உதவித் தவிசாளர் ஏ.எம்.எம். தாஜுதீன் இரண்டாவது முறையும் உதவி தவிசாளராகப் பணிபுரிகின்றார்.

கொழும்பில் தலைவருடனான சந்திப்பின் போது தவிசாளர் மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய தாஜுதீன் தலைமையிலான அதிருப்தியாளர்கள் அவரை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அதே கூட்டத்தில் பங்கேற்றிருந்த தவிசாளர்- தான் சக கட்சி உறுப்பினர்களுடன் இணங்கிச் செல்வதாக உறுதியளித்ததாக சந்திப்பில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தவிசாளர் தம்மைத் திருத்திக் கொள்ளாதவரை தாங்கள் மாற்று நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் எனவும் உதவித் தவிசாளர் தாஜுதீன் தெரிவிக்கின்றார்.

தலைமையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நாளை மீண்டும் கொண்டு வரவுள்ள பட்ஜட்டுக்கு தாங்கள் ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தவிசாளர் தம்மைத் திருத்திக் கொள்வதற்கு 3 மாத கால அவகாசத்தை தலைவர் ஹக்கீம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாற்றுக் கட்சிக்காரருடன் இணைந்து சபையை பிழையாக வழிநடத்தும் முயற்சியை தவிசாளர் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தங்களை அனுசரித்து நடக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் எமது கட்சி உறுப்பினர்கள் ஐவர் (பசறிச்சேனை முபாரக் உட்பட) தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விபரித்து தலைவரிடம் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தோம்.

அதனை அடுத்து தலைவர் ஹக்கீம் இந்தப் பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைத்திருந்ததை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். மீண்டும் இந்த வருடமும் இதே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளமை வேதனையளிப்பதாக தாஜுதீன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment