Monday, November 18, 2013

சற்று முன் நிந்தவூரில் பதற்றம் - பொலிஸார் மீது கல்வீச்சு

ரீ.கே.றஹ்மத்துல்லா

24 மணி நேரத்துக்கும் மேலாக நிந்தவூர், அம்பாறை – கல்முனை வீதியில் போடப்பட்டுள்ள வீதித் தடையை அகற்றுவதற்கு கலகமடக்கும் பொலிஸார் சற்றுமுன்னர் முயற்சித்ததை அடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் நடத்தி அவர்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர். இதனால், பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்ட பொதுமக்களில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை கண்டித்து நேற்றைய தினம் நிந்தவூர் பிரதேசம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதேவேளை போக்குவரத்துப் பாதைகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கற்கள் மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்படுத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்தே, அப்பிரதேசத்துக்கு சற்றுமுன்னர் விரைந்த கலகமடக்கும் பொலிஸார் அத்தடைகளை அங்கிருந்து அகற்றுவதற்கு முற்பட்டுள்ளனர். இதன்போதே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மீதும் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பதற்றம் நிலவுகின்றது. 

No comments:

Post a Comment