Wednesday, October 2, 2013

ஈரானிடம் அணு ஆயுதமில்லை என உறுதிப்படுத்த இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு திறந்தேயுள்ளது

(tn) ஈரானின் சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் குறித்த இராஜதந்திர பேச்சுவார்த்தையில் சுமுக நிலை ஏற்பட்டுள்ள சூழலில் ஈரான் மீதான பொருளாதார தடைகளை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

‘இராஜதந்திர முயற்சிகள் வெற்றியளித்தாலும் அழுத்தங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்’ என்று கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்த நெதன்யாகு கோரிக்கை விடுத்தார். ‘உறுதியான வெற்றி கிடைக்கப் பெறும்வரை இந்த அழுத்தங்கள் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என நான் கருதுகிறேன்’ என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

இதில் ஈரான் தனது இராணுவ அணுத் திட்டத்தை முற்றாக அகற்றிக்கொள்ள வேண்டும் என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

எனினும் ஈரான் மீதான தடைகளே அது பேச்சுவார்த்தைக்கு தயாராக அழுத்தம் கொடுத்ததென தாம் மற்றும் நெதன்யாகு இருவரும் நம்புவதாக ஒபாமா இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதமில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்குமான வாய்ப்பு திறந்தே இருப்பதாக ஒபாமா குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நோக்கி புறப்படும் முன் நெதன்யாகு அளித்த பேட்டியில், ஈரான் தனது இராஜதந்திர முயற்சி மூலம் மேற்குலகை முட்டாளாக்கி தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

ஒபாமா மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானிக்கு இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்று ஒரு சில தினங்களிலேயே நெதன்யாகு, அமெரிக்கா விரைந்துள்ளார்.

No comments:

Post a Comment