Wednesday, October 2, 2013

சவுதி அரேபியாவிற்கு தொழில்புரியச் சென்ற தாயை மீட்டுத்தருமாறு 7 வயது சிறுவன் மனு


இலங்கையில் சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் அக்டோபர் முதலாம் திகதி சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்புரியச் சென்றிருந்த தனது தாயை மீட்டுத்தருமாறு 7வயது சிறுவனொருவன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவனை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும தியாகராசா அனுலக்ஷன் என்ற இந்தச் சிறுவன் தன்னை பராமரித்து வரும் பாட்டியுடன் சென்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியத்தின் கல்முனை பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரியிடம் இது தொடர்பான எழுத்து மூல மனுவொன்றையும் கையளித்துள்ளார்.

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் திகதி இவரது தாயாரான தியாகராசா சுகந்தினி (வயது 29) சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக சென்றிருந்தார். 

கட்டிட தொழிலாளியான இவரது கணவன் முன்னதாக 2007ம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் செயற்பட்ட ஆயுத குழுவொன்றினால் கட்டிட வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் துப்பாக்கி சூட்டுச் சடலமாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது கணவன் மரணமடையும் போது குறித்த பெண் 3மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் ஏழ்மை காரணமாக குறித்த சிறுவனை 3வது வயதில் தன்னிடம் ஒப்படைத்து விட்டு அவர் வெளிநாடு சென்றதாகவும் பாடியாரான கதிர்காமர் யோகேஸ்வரி கூறுகின்றார்.

சவுதி அரேபியாவிற்கு சென்ற பின்னர் இரு வருடங்களாக தொடர்பிலிருந்த அவருடன் அதன்பின்னர், ஒரு வருடத்திற்கும் மேலாக தற்போது தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தனது தாயை மீட்டுத் தருமாறு சிறுவனால் அதிகாரிகளிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு அந்த பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரொருவரால் எழுதப்பட்டு, சிறுவனின் கையொப்பம் இடப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

சவுதி அரேபியாவில் இருந்து இரு வருடங்கள் தன்னுடனும் உறவினர்களுடனும் தொடர்புடன் இருந்த தாய் ஒரு வருடமாக எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருக்கின்றார் என்றும் தாயை வெளிநாட்டிற்கு அனுப்பிய உள்ளுர் முகவர் மூலம் எஜமானிடம் தொடர்பை ஏற்படுத்திய போது தாய் நாடு திரும்பி விட்டதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சபையின் கல்முனை பிராந்திய பொறுப்பதிகாரி எம். ஐ. நாஸரிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்ட போது,
குறித்த சிறுவனால் தனது தாய் தொடர்பாக சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களும் விபரங்களும் மேலதிக நடவடிக்கைக்காக உடனடியாகவே தலைமையக்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பதில் அளித்தார். குறித்த மனுவின் பிரதியொன்றை கல்முனை பிரதேச செயலாளர் கே. லவநாதனை தனது பாட்டியார் சகிதம் சந்தித்து சிறுவன் கையளித்துள்ளார்.  bbc

No comments:

Post a Comment