Sunday, September 29, 2013

முஸ்லிம்களை, தமிழ் தேசியம் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

வட மாகாணத்தின் ஆட்சி அதிகாரங்களை வட மாகாண சபை தேர்தலின் மூலம் கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண முஸ்லிம்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் அப்போதுதான் சகவாழ்வும் சகோதரத்துவமும் ஏற்படுமென பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று ரீதியான அமோக வெற்றியை ஈட்டியுள்ளது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கொள்வதுடன் வடமாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் எமது அமைப்பு வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் வட மாகாண தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டு அதன் மூலம் சரித்திர வெற்றி ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்தில் வட மாகாண சபை வட மாகாணத்தில் தமிழ் மக்களின் நலனில் காட்டும் அக்கறையும் ஆதரவும் வட மாகாண முஸ்லிம்கள் மீதும் காட்ட வேண்டும்.

சகோதரத்துவமும் இனக்கப்பாடும் சமூக ஒற்றுமையும் ஏற்படுத்தப்படுவதுடன் புரிந்துனர்வையும் நம்பிக்கையையும் கட்டி வளர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாடுபட வேண்டும்.  வட மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் இவ்வாறான விடயங்களில் கூடிய அக்கறை காட்டுவார் என நினைக்கின்றோம்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் இன்னும் புத்தளத்திலும் மன்னாரிலும் அகதி அந்தஸ்த்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மீள் குடியேற்றத்தில் வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிருவாகம் கூடுதல் அக்கறை எடுப்பதுடன் வடக்கில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் புனர்வாழ்வு, மற்றும் புனரமைப்பு, வாழ்வாதாரம், காணி விவகாரம் என்பவற்றில் கரிசணை செலுத்த வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.

எதிர் காலத்தில் வட மாகாண சபையின் நிருவாகத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்கு எமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். என பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment